;
Athirady Tamil News

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?!!

0

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016-ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

1959-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை அதிபராக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 13-ம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் முடிவடையும் என்பதால் அதற்குள் தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.