;
Athirady Tamil News

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை 1 மாதத்தில் முடிக்க திட்டம்: இந்தியா கூட்டணியின் கொள்கைகள் அக்டோபரில் வெளியீடு!!

0

“இந்தியா” என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் கலைந்துள்ளனர்.

இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்களிடம் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதையே மும்பை ஆலோசனை கூட்டம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பாரதிய ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு மும்பை கூட்டத்தின் முடிவுகள் மகிழ்ச்சி தருவதற்கு பதில் ஏமாற்றத்தையே அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேசினால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு விடும் என்று கருதி அதை சற்று தள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே மிக எளிதில் தொகுதி பங்கீடு செய்ய முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு விவரம் வருமாறு:- * பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுணர்வுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். * நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும். * “ஒன்றாக இணைவோம் ஒன்றாக வெற்றி பெறுவோம்” என்ற கருத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த குழுதான் இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். அவர்தான் இந்தியா கூட்டணி தொடர்பாக இனி முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த குழு தவிர 19 பேர் கொண்ட பிரசார குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 பேர் கொண்ட சமூக வலைத்தள குழு, 19 பேர் கொண்ட ஊடக குழு, 11 பேர் கொண்ட ஆய்வு குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த 5 குழுக்கள்தான் இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

இதில் முதன்மையான ஒருங்கிணைப்பு குழு விரைவில் கூட இருக்கிறது. அவர்களின் வழிகாட்டுதல் பேரில்தான் ஒரு மாதத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. சரத்பவார் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு இதை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கை விளக்க குறிப்புகளை அக்டோபர் 2-ந்தேதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த குறைந்தபட்ச பொது செயல்கொள்கை திட்ட அறிவிப்புகளை டெல்லியில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி நினைவிடத்தில் வெளியிடவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி ஒருவரை தேர்வு செய்தால் அவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பாரதிய ஜனதா திசை திருப்பி விடும் என்ற பயத்தில் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யாமல் தவிர்த்து உள்ளனர். அதுபோல இந்தியா கூட்டணிக்கு தனி லோகோ ஒன்றை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த லோகாவை பார்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்கள் கட்சி தேர்தல் சின்னத்தை பாதிக்கும் வகையில் கூட்டணியின் லோகோ அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இந்தியா கூட்டணிக்காக தயாரித்த லோகோ வெளியீடு கைவிடப்பட்டது. மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மும்பை கூட்டத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

கூட்டத்தில் அவர் மற்ற தலைவர்களிடம் பேசுகையில், “நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அவர்கள் தான் கூட்டத்தில் அதிக நேரம் பேசி உள்ளனர். இதனால் பிரயோஜனமும் கிடையாது” என்று அதிருப்தியை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது. மம்தா பானர்ஜியை போன்று கெஜ்ரிவாலும் அதிருப்தி தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இத்தகைய சிக்கலை தீர்ப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.