‘மெனிங்கோகோகல் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவித்தல்!!
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே ‘மெனிங்கோகோகல் பற்றீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து பதிவாகிய மற்றைய நோயாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும், அவர் ஜா-அல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அத்திடிய பிரதேசத்தில் பணியாற்றியவர் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.
மெனிங்கோகோகல் பற்றீரியா தொற்று கொழும்பிலும் பரவியுள்ளதாக சில ஊடகங்கள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வருடங்களிலும் இந்நோய் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்து உயிரிழந்த சிறு குழந்தைக்கு இந்த நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டாலும், அந்த குழந்தைக்கு மெனிங்கோகோகல் பற்றீரியா தொற்று ஏற்படவில்லை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.