;
Athirady Tamil News

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கியது- தமிழக முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம்!!

0

விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1500 சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஆவடி மற்றும் தாம்பரம் பகுதியில் 1000 சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2500 சிலைகள் பூஜைக்காக நிறுவப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அது தொடர்பான பணிகளை போலீசார் தொடங்கி இருக்கிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புளியந்தோப்பு பகுதியில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன், அழகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிலை தயாரிப்பாளர்கள் 17 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் 10 அடிக்கு மேல் சிலைகளை தயாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்காக எந்தெந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர் என்கிற தகவலை வாங்கி வைத்திருக்க வேண்டும். சிலைகளை தயாரிக்கும் இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் அப்பகுதியில் சிலைகளை வைக்கும் அமைப்பினரை அழைத்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதேபோன்று அனைத்து பகுதிகளிலும் விழா குழுவினரோடு ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 10-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளையும் போலீசார் விதிக்க உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத் துறை, மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். இவைகளை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதி அளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கிய கட்டுப்பாடான, விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் தயாரிக்கப்பட வேண்டும். வண்ணப்பூச்சு செய்ய வேண்டுமெனில் தண்ணீரில் கரையக் கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ண சாயங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனத்தால் ஆன வண்ணப்பூச்சுகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி உரிம மானது. பூஜையின் போது, காலையில் 2 மணி நேரங்கள் மற்றும் மாலையில் 2 மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும்.

வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும். வகையிலோ கோஷமிடக் கூடாது. சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவாக பேனர் வைக்கக்கூடாது. தீ பாதுகாப்பு விதிமுறைகள், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள். ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மாநகரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.