பெங்களூருவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் நைஜீரியா இளம்பெண் கைது!!
கர்நாடக மாநிலம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் பெங்களூருவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக மங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நைஜீரியாவைச் சேர்ந்த ரெஜினா ஜாரா என்கிற ஆயிஷா (33) என்பது தெரியவந்தது. மேலும் மாணவர் விசாவில் இந்தியாவுக்கு வந்து பின்னர் சிறிது காலம் ஒரு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்காகவே அவர் தனது வேலையை விட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஆர்.ஜெயின் கூறியதாவது:-
போதைப்பொருளுடன் கைதான நைஜீரிய இளம்பெண் மீது கர்நாடக மாநிலத்தில் பல போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளது. மாணவர் விசாவில் இந்தியாவுக்கு வந்து பின்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் விலை உயர்ந்த செல்போன், ரூ.2910 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20.52 லட்சம் ஆகும். மேலும் இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.