திருட்டு, கொள்ளை எதிரொலி- பூட்டு போட்ட கண்ணாடி அலமாரிகளில் பொருட்களை வைக்கும் பல்பொருள் அங்காடிகள்!!
அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய பரப்பளவில் அனைத்து வகையான பொருட்களும் அங்கேயே கிடைக்கும் வகையில் அங்காடிகளை உருவாக்கி வர்த்தகம் செய்து வருகிறார்கள். இவற்றில் வால்மார்ட், பெஸ்ட் பை, டார்கெட், மேஸீஸ் போன்ற பல்பொருள் அங்காடிகளும், மருந்து பொருட்களுக்கான அங்காடிகளான சிவிஎஸ் மற்றும் வால்க்ரீன்ஸ் போன்றவையும் மிகவும் பிரபலமானவை.
இத்தகைய அங்காடிகளில் மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை விரைவாக தேர்ந்தெடுத்து உடனடியாக பணம் செலுத்தி எடுத்து செல்ல வசதியாக பல திறந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், சமீப காலமாக இது போன்ற அங்காடிகளில் கொள்ளைகளும், திருட்டுகளும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
முகமூடி அணிந்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்து பணியாளர்களை மிரட்டி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும், கடைக்குள் பொருட்களை வாங்குவது போல் வந்து கண்காணிப்பு கேமிராவின் பார்வையிலிருந்து மறைந்து சிறு சிறு விலை குறைவான பொருட்களை திருடுவதும் அங்கு அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து அங்காடிகளிலும் திறந்தவாறு அலமாரிகளில் பொருட்களை வைக்கும் முறையை மாற்றி, அவற்றை கண்ணாடி அலமாரிகளில் வைத்து அவற்றிற்கு பூட்டும் போட தொடங்கி விட்டனர்.
இத்தகைய சில்லறை வணிக திருட்டுகளும், திட்டமிட்ட பெரும் கொள்ளைகளும் இந்த பல்பொருள் அங்காடிகளின் வருடாந்திர காலாண்டு வருமானங்களில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளதால் இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்ததாக அங்காடி மேலாளர்கள் கூறுகின்றனர். 2021ல் வால்க்ரீன்ஸ் சங்கிலித்தொடர் மருந்தக அமைப்பு, அமெரிக்காவின் ஸான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள 5 கடைகளை, சில்லறை திருட்டு அதிகரிப்பால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க முடியாமல் மூடி விட்டது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிக பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே அங்காடிகளில் பெரும் கொள்ளைகள் நடப்பது வாடிக்கையாகி வருவது பலரை வியக்க வைத்தாலும், நலிந்து வரும் உலக பொருளாதாரமும், வேலையின்மையும் அதிகரிக்கும் போது இது இன்னமும் அபாயகரமாக அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.