சமூக ஊடக பிரசாரத்திற்காக 20 ஆயிரம் பேரை நியமிக்கும் பாரதிய ஜனதா கட்சி- 250 கால் சென்டர்கள் அமைக்க திட்டம்!!
அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே அந்த தொகுதிகளுக்கு மத்திய மந்திரிகளை பொறுப்பாளர்களாக நியமித்து பிரசார வேலைகளை தொடங்கிவிட்டது. அதன்படி மத்திய மந்திரிகள் அந்த தொகுதிகளில் அடிக்கடி முகாமிட்டு கடந்த 9 ஆண்டுகளாக நடை பெற்று வரும் பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர்.
மேலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அவர்கள் மூலமாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள், தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது போன்ற பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா கட்சி தனது சமூக ஊடக பிரசாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சமூக ஊடக பிரசாரத்தின் மூலம் பாரதிய ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகால செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை மக்களிடம் பரப்புவது மட்டுமல்லாமல் வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை துடிப்பான, சுயசார்பு கொண்ட மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சமூக ஊடக பிரிவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிகப்படுத்தி அவர்கள் மூலமாக கட்சி பணிகளில் மக்களை ஈடுபட செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:- இந்தியாவில் இணையதளத்தில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சி மீது அக்கறை கொண்ட கட்சியாக பா.ஜனதா விளங்குகிறது.
எனவே பா.ஜனதாவின் சமூக ஊடக பிரிவினர் பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் வீடியோ பிரசாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 150 இடங்களில் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 13 ஆயிரம் பேர் இருந்தனர். இந்த தேர்தலில் 250-க்கும் மேற்பட்ட கால் சென்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் சிப்ட் முறையில் 20 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம் இந்த பணிகளை ஒருங்கிணைக்கும். இந்த குழுவினர் அரசாங்கத்தின் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் சந்திரயான்-3 வெற்றி, பெண்கள் உரிமைக்கு ஆற்றிய பணிகள் உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வார்கள். பாரதிய ஜனதா கட்சியில் 18 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 99 சதவீதம் பேர் இணையத்தை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் சுமார் 70 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்கள் உள்ளனர். இதில் கிராமப்புறங்களிலும் இணையத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா கட்சி தனது சமூக ஊடக பிரிவை வலுப்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கும் சமூக ஊடக அழைப்பு மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை பா.ஜனதா கட்சி நடத்தி உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சுனில் பன்சார் இந்த நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்றார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பேசினார்கள்.