;
Athirady Tamil News

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வு பணி தொடக்கம்- விரைவில் அறிக்கை தாக்கல்!!

0

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குழுவின் தலைவராக செயல்படுவார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர். இக்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார். குழுவின் செயலராக சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் நிதின் சந்திரா பணியாற்ற உள்ளார்.

ராம்நாத் தலைமையிலான உயர்நிலைக்குழு மேற்கொள்ள இருக்கும் பணிகளின் விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன. மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, அதில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

இத்தகைய அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல். தொங்கு பேரவை, நம்பிகையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம் போன்ற தருணங்களுக்கான தீர்வுகளை ஆய்வு செய்து பரிந்துரைத்தல். ஒரே நேர தேர்தல்களுக்கான கட்டங்கள், கால வரம்பு தொடர்பான செயல்முறையைப் பரிந்துரைத்தல், ஒரே நேர தேர்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி போன்ற சாதனங்கள், மனிதவளம் குறித்து ஆராய்தல். ஒரே நேர தேர்தல்களுக்கான பொதுவான வாக்காளர் பட்டியல் பயன்பாடு குறித்து வழி முறைகளை ஆராய்தல். ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு உடனடியாக செயல்பாட்டை தொடங்குவதோடு, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும். கூடிய விரைவில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். இக்குழுவின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் செயல்படும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.