பாகிஸ்தானில் அதிகரித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் !!
பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.
இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் “பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (பிஐசிஎஸ்எஸ்)“ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 தற்கொலைத் தாக்குதல்களும் அடங்குகின்றது.
இதேளை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்திலே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆனால், பாகிஸ்தான் தலிபான் எனப்படும் “தெஹ்ரீக்-ஏ-தலிபான்(டிடிபி)“ எனும் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகக் கூறிய 147 தாக்குதல்களைவிட இந்த எண்ணிக்கை குறைவாகும்.
இந்தத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் உட்பட மொத்தம் 112 போ் உயிரிழந்ததுடன் மேலும், 87 போ் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதத்தில், 54 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், 83 சதவீதம் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஓகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளன. இதில் பலூசிஸ்தான் மற்றும் கைபா்பக்துன்கவா உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கிழக்கு பகுதிகளான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தாக்குதல்கள் குறைவாக இருந்ததால் அங்கு பரவலாக அமைதி நிலவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இராணுவ வீரா்களின் உயிரிழப்பும் கடந்த மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்புப் படையினரின் பதில் நடவடிக்கைகளில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 69 போ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.