திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 4 ஆண்டுகளில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.1000 கோடி வருவாய்!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பழமையான கோவில்களை புதுப்பிக்கவும் புதிய கோவில்களை கட்டவும் தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஸ்ரீ வாணி அறக்கட்டளையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் தரிசனம் மூலம் அந்த ஆண்டு 26.25 கோடி வருவாய் கிடைத்தது. 2020-ம் ஆண்டு ரூ 20.21 கோடியும், 20 21-ம் ஆண்டு ரூ 176 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ 282.64 கோடியும், 2023-ம் ஆண்டு 268. 35 கோடி என கடந்த 4 ஆண்டுகளில் ரூ.970 கோடி வருவாய் கிடைத்தது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் கிடைத்த வருவாய் வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் ரூ.36 கோடி வட்டி கிடைத்து உள்ளது.
இதனால் வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் கிடைத்த வருவாயில் 176 பழமையான கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2,273 புதிய கோவில்கள் கட்டப்பட்டு உள்ளது. 51 கோவில்களில் தினமும் பூஜை செய்ய மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.