நாகர்கோவில்-மங்களூரு ரெயிலில் பெண் பயணிக்கு தொல்லை: 3 வாலிபர்கள் கைது!!
நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பயணிக்கிறார்கள். இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று இளம்பெண் ஒருவர் பயணித்தார். அந்த பெண் பயணித்த பொதுப்பெட்டியில் பயாஸ்(26), முகம்மது ஷபி(36), அப்துல் வாஹித் (35) ஆகியோரும் பயணித்துள்ளனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள், அந்த பெண் பயணியிடம் தவறாக நடந்துள்ளனர். கண்ணூர் ரெயில் நிலையம் வரை அந்த பெண்ணுக்கு அவர்கள் 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர். அவர் கண்டித்தும் வாலிபர்கள் 3 பேரும் தொடர்ந்து அத்துமீறியபடி இருந்துள்ளனர். இதனால் அந்த பெண் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதையடுத்து ரெயில் நடுவழியில் நின்றது.
டிக்கெட் பரிசோதகர் பொதுப்பெட்டிக்கு வந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று விசாரித்தார். அப்போது அந்த பெண், வாலிபர்கள் 3 பேரும் தன்னிடம் தவறாக நடந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து 3 வாலிபர்களையும் சக பயணிகள் பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் அந்த பெண் பயணி புகார் தெரிவித்தார். அதன்பேரில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.