மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!!
தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதிர, மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவித்தார்.
மேலும் வீடுகளை சுற்றிலும் மண்சரிவு மற்றும் கற்புரள்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (03) நள்ளிரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
வாத்துவ பொதுப்பிட்டிய புஷ்பராம வீதியின் குறுக்கே மரம் ஒன்று வீழ்ந்ததால் அந்த வீதியின் போக்குவரத்திற்கும் மின்சாரம் மற்றும் தொலைபேசி விநியோகத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பாணந்துறை நகர எல்லைக்குட்பட்ட பாணந்துறை கைத்தொழில் வலயத்திற்கு செல்லும் வீதியில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால், கைத்தொழில் வலயத்திகுள் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேவேளை, சீரற்ற வானிலை தணிந்த நிலையில், நேற்று பிற்பகல் பண்டாரகம உயன்வத்தை குளத்திற்கு பலர் வேடிக்கை பார்க்க வருவதை காணக்கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும், வெள்ள நிலைமையில் நீராடுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இன்று (04) காலை மழையில்லாத வானிலையே நிலவுகிறது.