பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க் !!
டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பராக் அக்ரவாலின் பணி நீக்கத்திற்கான காரணம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டு (2022) ஒக்டோபெர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முற்று முழுதாக வாங்கிய எலான் மஸ்க் முதலாவது பணியாக அப்போதைய டுவிட்டெரின் தலைமை அதிகாரி பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.
இன்று டுவிட்டரின் இலாபத்தை பெருக்க மஸ்க் எத்தனை உத்திகளை கையாண்டாலும், பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தது பரவலான பேசுபொருளாக அனைவர் மத்தியிலும் உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வாழ்க்கை வரலாறு
இந்நிலையில் வால்டர் ஐசக்ஸன் என்பவர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ளது, இந்நிலையில் அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்ற ஆண்டு (2022) மார்ச் மாதமளவில் டுவிட்டரை வாங்குவதற்கு முன்னரே பராக் அக்ரவாலை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்துள்ளார்.
“அக்ரவால் ஒரு ‘நல்ல மனிதர்.’ ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு ‘நல்ல மனிதர்’ எனும் குணம் மட்டும் போதாது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரி மக்களால் விரும்பப்பட வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை.
நெருப்பை உமிழுகின்ற டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை,” என்று மஸ்க் கருதியிருப்பதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இதுவே பாராக் அகர்வாலை பணி நீக்கம் செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல், கடந்த ஒக்டோபர் மாதம் பராக்கை மஸ்க் பணிநீக்கம் செய்ததன் பின்னர், இந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பில் பணியமர்த்தாது அவரே அந்த பொறுப்பை வகித்து வந்துள்ளார்.
2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் தேர்ச்சி பெற்றுள்ள லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்ததைத் தொடர்ந்து மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.