உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் புது அப்டேட்!!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, தங்கள் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து இஸ்ரோ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், “விக்ரம் லேண்டர் திட்டமிட்ட குறிக்கோளை தாண்டியே சிறப்பாக செயல்பட்டது.
அது வெற்றிகரமாக ஒரு “ஹாப்” பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளை இட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது.” “இன்று 08:00 மணிக்கு விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு செல்லுமாறு செயலாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதனுள்ளேயே சில பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது.
அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.” “ஆனால், அதில் உள்ள சமிக்ஞைகளை கிரகிக்கும் ‘ரிசீவர்’ கருவி அணைக்கப்படவில்லை. சூரிய ஒளியிலிருந்து பெறும் சக்தி நின்றவுடன் பிரக்யானுக்கு அருகில் லேண்டர் உறக்க நிலைக்கு சென்று விடும். செப்டம்பர் 22 அன்று பிரக்யானும், விக்ரமும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்,” என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது. லேண்டர் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே கிளம்பியது உட்பட அதன் சமீபத்திய செயல்கள் குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.