சிறப்பு பயிற்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா. சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான ‘நட்பு தூதர்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார். தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.
இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, “இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தார். சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.