சனாதனம் விவகாரம்- உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!!
வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் “சனாதன தர்மம்” கருத்துக்கு தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும் காங்கிரஸ் ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. காங்கிரஸின் இளம் தலைவர்களான பிரியங்க் கார்கே, கார்த்தி சிதம்பரம் போன்றோர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காங்கிரஸ் கருத்து தெரிவித்த பிறகு பேசினார். அப்போது, உதயநிதி ஸ்டாலினின் சனாதான தர்மம் தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெவித்தார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:- உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்த வரையில், அவர் ஒரு இளையவர். என் தரப்பில் இருந்து, அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எங்களிடம் பல கோவில்கள் உள்ளன. நாங்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.