நம்முடைய தேசிய அடையாளம் பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்து அல்ல: ஆம் ஆத்மி விமர்சனம்!!
பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டமைப்புக்கு இந்தியா (I.N.D.I.A.) எனப் பெயரிட்டுள்ளது. இது இந்திய நாட்டை குறிப்பது போன்று உள்ளதால், பா.ஜனதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்தியா- பாரத் சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில் “நமது தேசிய அடையாளம் பா.ஜ.க.-வின் தனிப்பட்ட சொத்து அல்ல” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.