;
Athirady Tamil News

கர்நாடகாவில் பருவமழை 26 சதவீதம் குறைவாக பெய்துள்ளது- கிருஷ்ண பைரேகவுடா பேட்டி!!

0

கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி பைரேகவுடா தலைமையில் இயற்கை பேரிடர்களுக்கான அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த பருவமழை காலத்தில் செப்டம்பர் 4-ந் தேதி வரை கர்நாடகாவில் 26 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆகஸ்டு 19-ந் தேதி வரை மாநிலத்தில் உள்ள 237 தாலுகாக்களில் 113 தாலுகாக்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக 62 தாலுகாக்கள் மட்டுமே வறட்சி பாதிக்கப்பட்டதாக அறிவிக்க தகுதி பெற்றுள்ளன.

இருப்பினும் ஆகஸ்டு 19-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் நிலைமை மோசமடைந்து உள்ளதால் கூடுதலாக 134 தாலுகாக்களில் மேலும் பயிர் சேதம் பதிவாகி உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 196 தாலுகாக்களில் வறட்சி நிலவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் இன்னும் 4 நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் எத்தனை தாலுகாக்கள் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது சரியாக தெரியும்.

தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு மனுதாக்கல் செய்வோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல் மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார். வறட்சி பாதித்த தாலுகாக்கள் அதிகார பூர்வமாக கண்டறியப்பட்டதும், ஒவ்வொரு தாலுகாவிலும் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அரசு பணிக்குழு அமைத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். வறட்சி பாதித்த தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.