;
Athirady Tamil News

பிரக்யான் ரோவர் எடுத்த 3 டி புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!!

0

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணங்களில் பொருள் அல்லது நிலப்பரப்பை எளிய முறையில் காட்சிப்படுத்துவதாகும். பிரக்யான் ரோவரில் உள்ள கேமராவில் இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி இந்த அனாக்லிஃப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று சேனல் புகைப்படத்தில், இடது பக்க புகைப்படம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வலது பக்க புகைப்படம் நீலம் மற்றும் பச்சை (சியான்) சேனல்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையிலான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இது மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. இதை முப்பரிமாணத்தில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.