;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம் – ஏன் தெரியுமா?!! (கட்டுரை)

0

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.

நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில் கொஞ்சும் கொல்லிமலையின் அடிவாரப் பகுதி.

அடிவாரப் பகுதியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் இருந்து கொண்டை ஊசி (HAIR PIN BEND) வளைவுகள் துவங்குகின்றன.

அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். பேருந்து நிலையம் இங்குதான் உள்ளது. பேருந்து வசதியைப் பொருத்தவரை பிரச்னை இல்லை, தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களே அதிகம்.

அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 300 அடி உயரம் கொண்டது. மூலிகைகள் ஊடாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் இதில் குளிக்கவே, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இத்தனை கஷ்டப்படுகின்றனர்.

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 வயதில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். சிறியவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இளையவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்தில் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிடலாம், சுமார் 50 வயதுடையவர்கள் செல்ல சுமார் 3 மணி நேரமாகும்.

அருவியில் சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும், இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோவில்.

கொல்லிமலையை சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நிதிஷ் காந்த், 22 என்பவர் வந்தார்.

மலைப்பகுதியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காண அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 700 படிக்கட்டுகளைக் கடந்தபோது நிதிஷ்காந்த் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கொல்லிமலை தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர்.

இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.

சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கொல்லிமலை வனத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் தற்போது இதைக் கடைபிடித்து வருகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், “ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுமார் 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் முன்பே இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளோம்,” என்று கூறினார்.

அதிக உடல் பருமனோடும் நடக்க முடியாமலும் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மூலம் கண்டறிந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், “சுற்றுலா பயணிகள் சிலர் தெரியாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு, கொஞ்சம் ‘ரெஸ்ட்’ எடுத்துச் சென்றாலும் பரவாயில்லை. போட்டி, போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்ற நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவர் தனது அண்ணனுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளது. மேலும், உடல் பருமனுடன் இருந்துள்ளார்,” என்று கூறுகிறார் ராஜாங்கம்.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு வனத்துறை மூலமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணித்து சந்தேகம் வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே அனுப்பி வருவதாகக் கூறுகிறார் ராஜாங்கம்.

சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவற்றை வனத்துறையினர் பரிசோதனை செய்கிறார்கள். இதற்காக வனத்துறைக்கு உரிய மருத்துவ உபகரணம் கொடுத்து, உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை மூலம் பரிசோதித்து, அதில் இந்த நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளை ஏறும் உடல் தகுதி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களை அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும் மூச்சு வாங்கும்படி செல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து உரிய ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். இதை உணர்ந்து நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் பிரச்னை வராது. இதை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்,” என்று வலிபஉறுத்துகிறார் ராஜாங்கம்.

வனத்துறை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது என்று கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

“பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிய இலக்குதான்.

கவனமாகச் சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டும். பாறை நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும்,” என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதை சுற்றுலா பயணிகள் உணர்ந்து பத்திரமாக நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு நலமோடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.