;
Athirady Tamil News

பாரத், இந்தியா சர்ச்சையில் முக்கியத்துவம் பெறும் செப்டம்பர் 18!!

0

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. “அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்” என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31 அன்று இதனை அறிவிக்கும்போது தெரிவித்திருந்தார். எந்தெந்த பிரச்சனைகள் மற்றும் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் என்னென்ன தீர்மானங்கள் முன்மொழியப்படும் அல்லது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்தும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், இக்கூட்டத்தொடரில், நமது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதற்கு பதிலாக “பாரத்” என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இச்செய்திக்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில் அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில், “இந்தியாவின் ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரத்தின் ஜனாதிபதி” என குறிப்பிடப்பட்டுள்ளதை விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

இதற்கிடையே, இந்தியா-பாரத் பெயர் மாற்ற சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இந்தியாவிற்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 389 பேர் உறுப்பினர் கொண்ட “அரசியலமைப்பு சபை” ஒன்று உருவாக்கப்பட்டது.

இச்சபை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26 அன்றுதான் செயலாக்கம் பெற்றது. அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 1ல், ‘பாரத்’ எனும் பெயரும் ‘இந்தியா’ எனும் பெயரும் இடம் பெறுகிறது. 4 நாட்கள் விவாதம் செய்த இந்திய அரசியலமைப்பு சபை, 1949 செப்டம்பர் 18 அன்று “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் யூனியனாக இருக்கும்” என தொடங்கும் வரைவை ஏற்று கொண்டது. இதை குறிப்பிட்டு தற்போதைய சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் (செப்டம்பர்) 18 அன்று தொடங்க போவதையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.