ஆளுநர் மாளிகை முன் தர்ணா: மம்தா பானர்ஜி ஆவேசம்!!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:- மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற விவகாரங்களிலும் தலையிடுகிறார். பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம். மாநில அரசின் நிர்வாகத்தை முடக்க நினைக்கும்ஆளுநருக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இங்கே ஒரு கவுரவ கவர்னர் உட்கார்ந்து இருக்கிறார். அவர் கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியாக பார்ப்பேன் என்கிறார். நடுராத்திரியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாற்றப்படுவதை எங்கேயாவது கேட்டிருப்பீர்களா?. ஒரேநாள் இரவில் முன்னாள் ஐ.பி.எஸ், முன்னாள் நீதிபதியை கொண்டு வந்துள்ளார். தன்னை ஜமீன்தார் என்று நினைத்து எல்லாவற்றையும் செய்கிறார். உங்களுடைய கட்டளைக்கு ஏதாவது கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கீழ் படிந்தால், நிதி வழங்குவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவேன். அதன்பின் துணை வேந்தருக்கு எப்படி சம்பளம் வழங்குகிறீர்கள் என்று பார்ப்போம்.
பேராசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பீர்கள் என்று பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி உண்டு. இதில் சமரசம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஏழு பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால துணை வேந்தர்களை மாநில அரசின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் நியமித்தார். இதில் இருந்து மோதல் போக்கு அதிகமாகியுள்ளது.