ரஷ்யாவின் பகுதியை உரிமை கோரும் சீனா – இரு நட்பு நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்படுகிறதா?!!
கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது.
புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை சீனா தனது பகுதியாகக் காட்டியிருந்தது, அதே நேரத்தில் தென் சீனக் கடலில் உள்ள மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய கடல் பகுதிகள் மற்றும் தீவுகளை சீனா தனது சொந்த பகுதியாக அறிவித்திருந்தது.
அதேபோல் சீனா தனது புதிய வரைபடத்தில், ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய போல்ஷோய் உசுரிஸ்கி தீவையும் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்தத் தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த தீவில் ரஷ்யாவிற்கும் பங்கு உள்ளது ஆனால் சீனா தனது புதிய வரைபடத்தில் முழு தீவையும் தனக்கு சொந்தமானதாக அறிவித்துள்ளது.
இது நடந்து சில நாட்கள் அமைதிக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய தீவில் சீனா உரிமை கோருவது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, போல்ஷோய் உசுரிஸ்கி தீவின் மீதான சீனாவின் உரிமைகோரலை நிராகரித்திருக்கிறார். தீவின் உரிமை குறித்த பிரச்சினை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையில், ஜகரோவா, ‘எங்களுக்கு இடையேயான இந்த எல்லைப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்ற நிலைப்பாட்டில் இரு நாடுகளும் நிற்கின்றன. 2005-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி போல்ஷோய் உசுரிஸ்கி தீவு இரு நாடுகளுக்கும் இடையே பிரிக்கப்பட்டது,’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் சீனா வெளியிட்டிருக்கும் புதிய வரைபடத்தில், இந்த 135 சதுர மைல் தீவுக்கு முழு உரிமை கோரியுள்ளது.
பல வருட கடின உழைப்பிற்குப் பிறகு இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டதாகவும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் ஜகரோவா கூறுகிறார்.
இதன் மூலம் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வலுப்பெற்றுள்ளதாகவும், எல்லைப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதற்கு உலக நாடுகள் அனைத்திற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல் பதிவிட்டிருக்கும் ஒரு ட்வீட்டில், இது ஒரு சிறிய தவறு அல்ல என்றிருக்கிறார். ‘ஏனெனில் சீனாவின் இந்த வரைபடம் அதன் இறையாண்மை உரிமைகளை புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது,’ என்கிறார் அவர்.
மேலும் அவர், “ரஷ்யாவுடனான இந்தத் தவற்றைச் சரிசெய்ய சீனா புதிய வரைபடத்தை வெளியிடுமா? தனது தவறை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளுமா?” என்று கேட்டிருக்கிறார்.
எதிர்ப்பையும் மீறி இதுபோன்ற உரிமைகோரல்களுடன் புதிய வரைபடத்தை வெளியிடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைக் கெடுக்கும் என்று சிபல் கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோவ் சீனாவின் புதிய வரைபடத்திற்கு பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் சித்தாந்த் சிபல் தனது எதிர்வினையை X-இல் (முன்னதாக ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த டெனிஸ், இந்தியாவைப் போல ரஷ்யா இதைப் பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை என்றும், கள நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
1969-ஆம் ஆண்டில், அமுர் மற்றும் உசுரி நதிகளின் கரையில் சோவியத் யூனியனுக்கும் சீனாவிற்கும் இடையே ஒரு போர் நடந்தது.
அந்தப்போரில், சோவியத் ஒன்றியம் சீனாவை அணு ஆயுத தாக்குதலால் அச்சுறுத்தியது.
இதில் சீனா பின்வாங்க வேண்டியதாயிற்று. 2004-ஆம் அண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய ஆசியாவின் பல தீவுகள் ரஷ்யாவால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பகைமைக்கு முக்கிய காரணமாக போல்ஷோய் உசுரிஸ்கி தீவு இருந்து வருகிறது
சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பகைமைக்கு முக்கிய காரணமாக போல்ஷோய் உசுரிஸ்கி தீவு இருந்து வருகிறது.
நான்கு தசாப்தங்கள் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2004-ஆம் ஆண்டு இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டின.
‘நியூஸ் வீக்’ பத்திரிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா தாராபரோவ் மற்றும் போல்ஷாய் உசுரிஸ்கியின் சில பகுதிகளைச் சீனாவிடம் ஒப்படைத்தது. அதன் பிறகு எதிர்காலத்தில் ரஷ்யாவின் வேறு நிலப்பரப்புகளை கோர மாட்டோம் என சீனா ஒப்புக்கொண்டது.
2005-ஆம் ஆண்டில், விளாதிமிர் புதின் இந்த ஒப்பந்தத்தை பாராட்டினார், அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் செயல்முறை தொடங்கியது.
போல்ஷோய் உசுரிஸ்கி தீவு, உசுரி மற்றும் அமுர் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. அதனால்தான் ரஷ்யாவும் சீனாவும் இந்தத் தீவை தங்களது என்று கோருகின்றன.
2008-ஆம் ஆண்டில் எல்லை முடிவு செய்யப்பட்டது. இதில் இரு நாடுகளும் தீவை தோராயமாக பாதியாகப் பிரித்துக்கொண்டன. தீவின் 350 சதுர கிலோமீட்டரில், 170 சதுர கிலோமீட்டரை ரஷ்யா சீனாவிடம் ஒப்படைத்தது.
1860-ஆம் ஆண்டில் அமுர் ஆற்றின் குறுக்கே நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் வரையப்பட்டபோது, அந்தத் தீவின் உரிமையைப் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கின. ஏனென்றால் அதுவரை அதன் நிலை தெளிவாக இருக்கவில்லை.
போல்ஷோய் உசுரிஸ்கி தீவு மற்றும் அதன் அருகே இருக்கும் தீவான தாராபோரோவ் ஆகியவை 1929-இல் சோவியத் துருப்புக்களால் கைப்பற்றப்பட்டன. 1991-இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பிறகும், இரண்டு தீவுகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தன.
2008-ஆம் ஆண்டில், போல்ஷாய் உசுரிஸ்கி தீவின் ஒரு பகுதியான தாராபரோவ் மற்றும் சிறிய தீவுகளான வினோகிராடோவா, கோரெஸ்கி, ரோமாஷ்கிலன் ஆகியவற்றை ரஷ்யா சீனாவிடம் ஒப்படைத்தது.
2016-ஆம் ஆண்டில், ரஷ்ய செய்தி நிறுவனமான தாஷ், சீன செய்தித்தாள் ஒன்றை மேற்கோள் காட்டி, போல்ஷாய் உசுரிஸ்கியின் எல்லையில் எல்லைக் கடவை அமைப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தெரிவித்தது.
அந்த நேரத்தில், ரஷ்யா எல்லைப் பதிவுகளை பரிந்துரைத்தது. இதன் பயன் ரஷ்ய நகரமான கபரோவ்ஸ்க் மற்றும் சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஃபுயுவான் நகரத்திற்கு இடையே பயணம் அனுமதிக்கப்பட்டது.
நேட்டோவின் இருப்பு ஆசியாவில் அதிகரித்து வருவது காரணமாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து புதினும் ஜின்பிங்கும் கவலை தெரிவித்திருந்தனர்
1950-இல் மாவோவும் ஸ்டாலினும் சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான நட்பு, கூட்டணி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 73 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங் மற்றும் விளாதிமிர் புதின் ஆகிய தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ‘இணையில்லாத நட்பை’ உலகுக்குக் காட்டினார்கள்.
ஆனால் இரு நாடுகளும் சித்தாந்த வேறுபாடுகள், பிரிவினைகள், நல்லிணக்கம், ஆயுத மோதல்கள் என நீண்ட தூரம் கடந்து இந்நிலைக்கு வந்திருக்கின்றன.
இந்த இரண்டு அண்டை நாடுகளின் வரலாறு நீளமானது. பல தசாப்தங்களாக, சோவியத் யூனியனும் சீனாவும் கம்யூனிசத்தின் இரண்டு பெரிய துருவங்களாக இருந்தன. கம்யூனிசக் கொள்கைகள் மற்றும் அவற்றின் உலகளாவிய செல்வாக்கு குறித்த விவாதங்களில் பலமுறை அவை நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதையும் மீறி, சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது.
பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா பொருளாதார உறவுகளின் அடிப்படையில் முன்பை விட சீனாவை அதிகம் சார்ந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்தார்.
அவர் ரஷ்ய அதிபர் புதினை ‘தெளிவான பேச்சாளர் மற்றும் திறந்த இதயம் கொண்ட நண்பர்’ என்று விவரித்தார். இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி மற்றும் அரசியல் உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
புதின் சீனாவை ‘ரஷ்யாவின் மிக முக்கியமான வர்த்தக பங்குதாரர்’ என்று விவரித்தார் மற்றும் சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க உறுதியளித்தார்.
ரஷ்ய எரிவாயுவை மங்கோலியா வழியாக சீனாவிற்கு கொண்டு செல்ல, சைபீரியாவில் குழாய் அமைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்திருந்தது.
இதுமட்டுமின்றி, புதிய AUKUS ஒப்பந்தம் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கவலைகளை தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
நேட்டோவின் இருப்பு ஆசியாவில் அதிகரித்து வருவது காரணமாக இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், வரைபடத்தில் எழுந்துள்ள சர்ச்சையானது இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தக் கடினமான நேரத்தில் ரஷ்யா தனது நண்பரான சீனாவுடன் இந்த சிக்கலை எவ்வாறு தீர்க்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சோவியத்தின் விழுமியங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரம் ஜின்பிங்கின் மனதில் ஆழமாக இடம்பிடித்துள்ளன.
ரஷ்யா மீதான ஷி ஜின்பிங்கின் நாட்டம் அவரது குடும்பம் மற்றும் வளர்ப்பு சார்ந்தது.
ஷி ஜின்பிங்கின் வாழ்க்கை தொடர்பாக WSJ பத்திரிகை இவ்வாறு எழுதியுள்ளது: “1953-இல் ஷி ஜின்பிங் பிறந்தபோது, அதே ஆண்டில், மாவோ சே துங் சோவியத் யூனியனை சீனாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அமைப்புக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதி அதை ஆய்வு செய்தார்.”
ஷி ஜின்பிங்கின் தந்தை ஷி சோங்ஷூன் ஒரு புரட்சியாளர், மாவோவின் புரட்சியுடன் தொடர்புடையவர். 1950-களின் பிற்பகுதியில், ஷி சோங்ஷுன் கனரக தொழில்துறையைப் படிக்க சோவியத் ஒன்றியத்துக்குச் சென்றார். சோவியத் ஒன்றியத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் மாவோ தொடங்கிய பிரச்சாரம் இளம் ஷி ஜின்பிங்கின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.”
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சோவியத்தின் விழுமியங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரம் ஜின்பிங்கின் மனதில் ஆழமாக இடம்பிடித்துள்ளன.
1991-இல் சோவியத் ஒன்றியம் உடைந்து ரஷ்யா உருவானபோதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்பட்டன. இருவரும் அமெரிக்காவை போட்டியாக பார்க்க ஆரம்பித்தனர்.
ஷி ஜின்பிங் அதிபராக பதவியேற்ற பிறகு, 2013-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவுடனான சீனாவின் சிறப்பு உறவுகளை குறிப்பிட்ட ஷி ஜின்பிங், தனது ஆளுமை புதினைப் போன்றது என்றும் கூறியிருந்தார். அன்று முதல் இரு தலைவர்களும் ஒருவர் மற்றவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த பிறகு, ஷி ஜின்பிங் சீனாவின் தலைமையின் கட்டமைப்பையும் தனக்கேற்ப மாற்றினார். தலைமைத்துவத்தின் அடிப்படையில் அவர் புதின் மாதிரியை ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இதன் கீழ், அவர் சக்திவாய்ந்த பொலிட்பீரோவை பலவீனப்படுத்தி, தன்னை மேலும் சக்திவாய்ந்தவராக ஆக்கிக்கொண்டார்.
2014-ஆம் ஆண்டு கிரைமியாவை யுக்ரேனிலிருந்து பிரித்து, ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் ஆழமடைந்துள்ளன. அப்போதும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை சீனா எதிர்த்தது.
இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எத்தனை முறை தீர்மானங்களை முன்வைத்தபோதும் சீனா அவற்றை ஆதரிக்கவில்லை.