சட்டவிரோத ஆட்சேர்ப்பு மேற்கொண்டார் சஜித் !!
வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்த காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,100 பேர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சட்டவிரோதமாக ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான சஹன் பிரதீப் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,“சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,100 பேர் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். இது சட்டவிரோதமானது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவர்களுக்கு வேலை செய்வதற்கு மேசை அல்லது நாற்காலி இருக்கவில்லை.
இந்த ஊழியர்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதும் அவர்கள் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அலுவலகங்களிலேயே பணியாற்றினர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஆட்சேர்ப்புக்காக அதிகார சபை வருடாந்தம் 1537 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது”என்றார்.