அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை !!
அரிசி கையிருப்பு தேவை என்பதால் நாம் தேசிய ரீதியில் அதனை கொள்வனவு செய்யும் போது மேலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமுண்டு என்றும் அதனால் அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான தயாசிறி ஜயசேகர எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலித்த அமைவ்வர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வருடத்தில் நாம் முன்னெடுத்த உரம் தொடர்பான கொள்கை காரணமாக நாட்டின் விவசாயத்துறை பெரும் வீழ்ச்சி கண்டமையால், கடந்த வருடத்துக்காக ஏழரை இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்பட்டது.
எனினும் கடந்த பெரும்போகம் எமக்கு சாத்தியமானதாக அமைந்ததால் இந்த வருடத்தின் இதுவரை காலத்தில் வெளிநாட்டிலிருந்து அரிசி கொள்வனவை மேற்கொள்ளவில்லை.எ வ்வாறெனினும் இம்முறை வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறு போகத்தில் நாம் எதிர்பார்த்த நெல்லைபெற முடியாமல் போகும்.
கடந்த ஓரிரு வாரங்களில் 40 முதல் 45 ரூபாயால் அரிசி விலை அதிகரித்துள்ளது. எனினும் அதற்கு சமமானதாக விவசாயிகளுக்கு நெல்லின் விலை அதிகரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வழமை போன்று குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் நிலையே தற்போது காணப்படுகிறது.
எமக்கு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை உள்ளது. அந்த விலையை மீறி விற்பனை செய்தால் அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு அரிசி கையிருப்பு தேவை என்பதால் நாம் தேசிய ரீதியில் அதனை கொள்வனவு செய்யும் போது மேலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமுண்டு. அதனால் அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விலை அதிகரிப்பு மேற்கொள்வோர் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை சுற்றி வளைப்பை மேற்கொண்டு வருகிறது.
பாரிய நெல் ஆலை உரிமையாளர்களிடம் அரிசி உள்ள போதும் அவர்கள் அதனை விற்பனைக்கு விடவில்லை. அவர்கள் அதிக விலைக்கே அரிசியை விற்பனை செய்கின்றனர். அது தொடர்பில் நாம் இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.