இறக்குமதி கட்டுப்பாடுகள் இறுதிக்குள் நீக்கப்படும்!!
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் 2023ஆம் ஆண்டு இறுதியில் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நிதி அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக கோதுமை மா மற்றும் தரை ஓடுகளை நிர்வகிப்பதில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய இரட்டைக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் இருக்கும் என்று என குழு வினவியபோதே அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341 / 38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைக்கும் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, முதல்தடவையாகப் புலம்பெயர் கொடுப்பனவைக் கோருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கான தகைமையுடைய புலம்பெயர் கொடுப்பனவு 30,000 அமெரிக்க டொலரிலிருந்து ஆகக் கூடியது 50,000 அமெரிக்க டொலராக அல்லது அதற்கு சமமான தொகைக்குக்கு அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலமும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
இதற்கமைய,. 1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உற்பத்தித் தீர்வை பொருந்தும் ஏதேனும் மோட்டார் வாகனம் தொடர்பாக வரிக்கட்டமைப்பை இலகுபடுத்த அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தித் தீர்வையை ஒரு கூட்டு வரியாகக் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டு அத்தகைய நபர்களின் வரிச்சுமையைக் குறைப்பது, வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பின்னர் மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படுகின்ற கரடுமுரடான சீர்செய்யப்படாத மாணிக்கக் கற்கள், வரிச்சுமையைக் குறைப்பதன் மூலம் உலக சந்தையில் அத்தகைய இலங்கை வணிகத்தின் போட்டித் தன்மையைப் பேணுவது, தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஏதேனும் பொருட்கள் குறித்தும் இந்தத் திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் இல்லாதபோது, வரிச்சுமையைக் குறைக்க மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களிலிருந்து விலக்கு அளிப்பதன் நோக்கம், செயல்திறன் மற்றும் தாக்கம் குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியிருந்தது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக, கௌரவ நிமல் லான்சா, கௌரவ இசுறு தொடங்கொட, கொளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உதுகொட, கெளரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.