நிலவில் சந்திரயான்-3 லேண்டரை படம்படித்த நாசா செயற்கைக்கோள்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.
சமீபத்தில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இருப்பதை நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சமீபத்தில் சந்திரயான் -3ன் லேண்டரின் புகைப்படத்தை பிடித்தது.
இந்த படம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அன்று எல்ஆர்ஓ-ஆல் எடுக்கப்பட்டது. இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்த நாசா,”எல்ஆர்ஓ விண்கலம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்தது. சந்திரயான் 3 தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு லேண்டரின் சாய்ந்த பார்வையை (42-டிகிரி ஸ்லூ ஆங்கிள்) எல்ஆர்ஓ கேமரா படம் பிடித்தது. ராக்கெட் ப்ளூம் நுண்ணிய ரேகோலித் (மண்) உடன் தொடர்புகொள்வதால் லேண்டரைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தெரிந்தது” என்றது.