சனாதன விவகாரம் – உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி!!
கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எனும் அமைப்பு, “சனாதன ஒழிப்பு கருத்தரங்கம்” எனும் பெயரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் உரையாற்றும் போது, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதனம் குறித்து பேசுகையில், “சமூக நீதிக்கும் சமநீதிக்கும் எதிரானது சனாதனம். சனாதன தர்மம் என்பது வெறுமனே எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; அது டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது” என கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு தி.மு.க.வில் உள்ள தலைவர்களும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மாநில எதிர்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவர்களும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களும், நாடு முழுவதும் உள்ள இந்து மத ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தான் தெரிவித்த கருத்திலிருந்து தான் பின் வாங்க போவதில்லை என்றும், எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்றும் கூறி வரும் உதயநிதி, தனது கருத்திற்கு ஆதாரமாக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி, “சனாதனத்தில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுகிறது” என கூறியிருந்தார். இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
அப்போது, “பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக படித்து பார்க்க வேண்டும். உதயநிதியின் கருத்திற்கு தக்க வகையில் பதிலடி தரப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை உருவானதில் இருந்து தற்போது தான் பிரதமர் மோடி, முதல் முறையாக இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உத்தர பிரதேச ராம்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.