‘பாரத்’ பெயரில் புத்தகம் தயாரிப்பு: எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி!!
ஜி20 உச்சிமாநாடு வருகிற 9, 10-ந்தேதிகளில் புதுடெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்துக்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனிடையே ஜி20 மாநாட்டை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி 2 புத்தகங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த கையேடுகள் கி.மு. 6 ஆயிரம் முதல் இந்தியாவின் வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. ‘ஜனநாயகத்தின் தாய் பாரதம்’ என்ற புத்தகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கலச் சிலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்து பாரதம் எப்படி ஜனநாயகத்தின் தாயாக இருந்தது என்பதுபற்றி இதில் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் “பாரத் என்பது நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் .
இது 1946-48 வரையிலான அரசிலயமைப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று எழுதப்பட்டு உள்ளது. 26 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டில், பாரதத்தில் அதாவது இந்தியாவில், ஆட்சியில் மக்களின் சம்மதத்தைப் பெறுவது ஆரம்ப காலத்தில் இருந்தே வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது. இது “பாரதத்தில் ஜனநாயக நெறிமுறைகளை” பண்டைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை விவரிக்கிறது, மதங்கள், பாடல்கள் மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நிகழ்வுகளும் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்திய நெறிமுறைகளின்படி, ஜனநாயகம் என்பது நல்லிணக்கம், தேர்வு சுதந்திரம், பல கருத்துகளை வைத்திருக்கும் சுதந்திரம், ஏற்றுக்கொள்ளும் தன்மை, சமத்துவம், மக்கள் நலனுக்கான நிர்வாகம் மற்றும் சமூகத்தில் உள்ளடக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் மக்களை வழிநடத்த அனுமதிக்கின்றன என்று அந்த புத்தகம் கூறுகிறது.