எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரித்தானிய ஊடகமான சனல் 4 நேற்று, இலங்கை அரசாங்க அதிகாரிகள் சிலர் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்துகின்ற சில சாட்சியாளர்களின் பிரத்தியேக நேர்காணல்கள் தம்வசம் இருப்பதாகக் கூறி ஒரு காணொளியை வெளியிட்டது.
குறித்த சாட்சியாளர்களில் பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவும் ஒருவர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் மற்றும் கிழக்கில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சல்லே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக சனல் 4 காணொளியில் தோன்றிய அசாத் மௌலானா குற்றம் சுமத்தினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிள்ளையான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் குண்டுதாரிகளுக்கும் தனக்குமிடையில் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.
வெளிநாட்டில் புகலிடம் கோருவதற்காக தனது முன்னாள் பேச்சாளர் பொய்களை கூறியதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறுவதாக அசாத் மௌலானா ஒரு வருடத்திற்கு முன்னர் தமது கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் சனல் 4 தனது காணொளிகள் மூலம் இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் தாம் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புள்ள மத, அரசியல் மற்றும் சமூக சக்திகளை பாதுகாக்க அசாத் மௌலானா முயற்சிப்பதாக தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் கிழக்கில் தமது கட்சியின் இருப்பை அழிக்க சில தரப்பினரின் முயற்சியாகக் கருதப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், சனல் 4 காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மாத்திரமன்றி, அசாத் மௌலானாவின் கூற்றுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச உதவியை கோரியுள்ளார்.
“இவ்வாறான வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் இலங்கையில் மீண்டும் ஒரு உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார்.