ஜி20 மாநாட்டில் யுக்ரேன் விவகாரம் புயலைக் கிளப்பினால் இந்தியா எப்படி கையாளப்போகிறது?!!
ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்தியா முதன்முறையாக நடத்தும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் நடைபெறும் நகரின் பெரிய இடமான பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகின் பல தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின், ஜி 20 மாநாட்டில் பங்கேற்காதது சர்வதேச அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மேலும், இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில், ரஷ்யா -யுக்ரேன் போர் தொடர்பாக, வளர்ந்த அல்லது மேற்கத்திய நாடுகள் மற்றும் ‘குளோபல் சவுத்’ என்று அழைக்கப்படும் உலகின் பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதேபோன்று, டெல்லியில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் யுக்ரேன் போர் விவகாரம் எதிரொலிக்கும் என்பது மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு நிபுணர்கள் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குஜராத் தலைநகர் காந்த நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளை சேர்ந்த கவர்னர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “யுக்ரேன் போர் எப்போதும் எங்கள் எல்லா உரையாடல்களிலும் இடம்பெறும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். ஜி 20 மாநாட்டில் இது பெரிய பிரச்னையாக எழுப்பப்படும் என்பதில் சந்தேகமில்லை” என்று மில்லர் தெரிவித்திருந்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லி உச்சி நாட்டில் பங்கேற்பதை கடந்த வாரம் உறுதிப்படுத்தினார். அப்போது அவர், “உலகம் யுக்ரேன் பக்கம் நிற்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
குஜராத் தலைநகர் காந்த நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளை சேர்ந்த கவர்னர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ரஷ்யா -யுக்ரேன் போர் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்ததால், கூட்டம் தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்படாமல் இரண்டு நாட்கள் நடந்த கூட்டம் முடிவுக்கு வந்தது.
இதேபோன்று, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் யுக்ரேன் போர் தொடர்பாக விவாதம் எழுந்தது. இதையடுத்து, இக்கூட்டத்தின் முடிவிலும் இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை.
ஜி 20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டங்களில் யுக்ரேன் போர் விவகாரம் தொடர்ந்து எதிரொலித்து வந்து கொண்டிருந்த நிலையில், ஜி 20 உச்சி மாநாட்டின் நோக்கம் குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த ஜூலை மாதம் தெளிவுப்படுத்தி இருந்தது.
“உலக பொருளாதார பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதற்காகத் தான் ஜி 20 உச்சி மாநாடு நடத்தப்படுகிறது,” என்று டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரியான அமிதாப் காந்த் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
மேலும், “ரஷ்யா-யுக்ரேன் போர் வளரும் அல்லது வளர்ந்து வரும் நாடுகளால் உருவானது அல்ல. போர் எங்களின் முன்னுரிமை இல்லை. அது வேறொருவருக்கு முன்னுரிமையாக இருக்கலாம்” என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.
ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன், யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான ராணுவத் தாக்குதலை நடத்தியது.
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை பாலி உச்சி மாநாட்டில் முக்கிய இடம் பிடித்தது. மாநாட்டின் முடிவில் தலைவர்கள் வெளியிட்டிருந்த பிரகடனத்தில் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் யுக்ரேனில் இருந்து ரஷ்யா நிபந்தனையின்றி முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவில் பொருளாதாரம் மற்றும் உலக விநியோக சங்கிலியில் யுக்ரேன் போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இதன் விளைவாக, உலக பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அத்துடன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை இந்த போர் ஏற்படுத்தியுள்ளது.
யுக்ரேன் போர் குறித்து பாலி மாநாட்டில் எழுப்பப்பட்ட குரல், டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் எதிரொலிக்கும் என்று வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“டெல்லி உச்சி மாநாட்டில் யுக்ரேன் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளதுடன், நேட்டோ நாடுகள் பலவும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளன.
எனவே இந்த விவகாரம் குறித்து உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்போது இந்தியா நிலைப்பாடு தெளிவாகும்” என்று டெல்லியைச் சேர்ந்த வெளியுறவுக் கொள்கை நிபுணரும், இந்திய அரசின் கொள்கைகளை ஆதரிப்பவருமான டாக்டர் சுவரோக்மல் தத்தா கூறியுள்ளார்.
அப்போது இந்தியா யுக்ரேன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவான அல்லது எதிரான நிலைப்பாட்டை எடுக்காது. மாறாக பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி மீண்டும் வலியுறுத்தும் என்பது தத்தாவின் கணிப்பாக உள்ளது.
“அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தற்போது மறைமுகப்போர் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் ஜி 20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
அதாவது வல்லரசு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் 2009 -11 காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த மீரா சங்கர்.
ஜி 20 உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில், யுக்ரேன் விவகாரம் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. ஏனெனில் இது பொருளாதார மேம்பாடு குறித்து விவாதிக்கும் இடம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“உலகம் தற்போது ரஷ்ய -யுக்ரேன் போரில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் ஜி 20 நாடுகளின் மாநாடு பெரும்பாலும் பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்துகிறது” என்று ஹாங்காங்கை தளமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஹெய் சிங் டசோ ஒப்புக் கொள்கிறார்.
யுக்ரேனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம்தான் தற்போது மிக முக்கியம்.
ஜி 20 மாநாட்டுக்கு தலைமைத் தாங்கும் நாடு என்ற முறையிலும், இந்த அமைப்பின் புரவலர் என்ற விதத்திலும் ரஷ்ய -யுக்ரேன் போரை நிறுத்த இந்தியா முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஹெய் சிங் டசோ
“யுக்ரேனில் போர் ஒரு பிரச்னை மற்றும் நெருக்கடி என்று எண்ணுகிறேன். இதை கருத்தில் கொண்டுதான் ரஷ்ய -யுக்ரேன் மோதலில் மத்தியஸ்தம் செய்ய கடந்த ஆண்டில் பல்வேறு நாடுகள் முயன்றன.
சீனாவிடமிருந்து இதுதொடர்பாக ஒரு எழுத்துப்பூர்வ முன்மொழி உள்ளது. பிரேசில் அதிபர் லூலா, தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த பிரச்னையில் சமாதான முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.
எனவே, யுக்ரேன் போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகளை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என்று ஹெய் சிங் டிசோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், யுக்ரேனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம்தான் தற்போது மிக முக்கியம். போருக்கு யார் பொறுப்பு என்பதை பின்னர் தீர்மானித்து கொள்ளலாம். எனவே, யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
“தமது இந்த அறிவுரையின்படி யுக்ரேன் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இந்தியாவால் மேற்கொள்ள முடிந்தால், அது இந்திய பிரதமர் மோதியின் சாதனையாகவும், இந்த ஜி 20 உச்சி மாநாட்டின் வெற்றிக்கான அளவுகோலாகவும் இருக்கும்” என்கிறார் பேராசிரியர் டிசோ.
ஆனால் டிசோவின் இந்த யோசனையில் இருந்து வேறுபடுகிறார் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரியும், மும்பையை தளமாகக் கொண்ட ‘கேட்வே ஹவுஸ்’ என்ற சிந்தனைக் குழுவை நடத்தும் நீலம் தேவ்.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் யுக்ரேன் பிரச்னை எழுப்பப்படலாம் ஆனால், அதற்கான தீர்வை காண முடியாது என்கிறார் அவர்.
“யுக்ரேனில் அமைதி திரும்ப வேண்டும் என்று தான் இந்தியா விரும்புகிறது. ஆனால் ஜி 20 மாநாட்டுக்கு வெளியே உள்ள இந்த பிரச்னையில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு வேறுபட்டிருக்கலாம். இதில் குளோபல் சவுத் என்றழைக்கப்படும் வளரும் நாடுகளுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை” என்றும் கூறுகிறார் நீலம் தேவ்.
ஜி 20 மாநாட்டில் யுக்ரேன் விவகாரம் எதிரொலிக்கும் என்று கூறப்படுவது, மோதியின் தலைமைக்கு ஒரு சோதனை என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சர்வதேச சமூகத்தின் பல்வேறு முன்னுரிமைகளுக்கு இடையே சமநிலையை எவ்வாறு பராமரிக்கிறது என்பதை வைத்தே, இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தீர்மானிக்கப்படும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மொத்தம் 19 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
உலக அளவில பெரும் பொருளாதாரத்தை கொண்டு 20 நாடுகளின் தலைவர்கள், 2008 இல் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாஷிங்டனில் முதன்முறையாக சந்தித்து பேசினர்.
அப்போது நெருக்கடியில் இருந்த உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க தங்களுக்குள் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உணர்ந்தனர்.
அதையடுத்து, பொருளாதார சிக்கல்கள் தீர்வு காணும் நோக்கில் 1997 -99 ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஜி 20 நாடுகளுக்கான அமைப்பு, உச்சி மாநாடு நடத்தும் அளவுக்கு அடுத்த நிலையை அடைந்தது.
அதன் பின்னர், உலக அளவில் பெரிய பொருளாதார கூட்டமைப்பாக உருவெடுத்த இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உறுப்பு நாடுகளின் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும், உலகளாவிய பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.
மொத்தம் 19 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
உலகின் பெரும் பொருளாதார நாடுகள் மற்றும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
ஜி 20 உச்சி மாநாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஓர் உறுப்பு நாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த இந்தோனேசியாவுக்கும், இந்த ஆண்டு இந்தியாவுக்கும் மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் அடுத்து பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஜி 20 மாநாட்டை நடத்த உள்ளன.
உலக அளவில் வளரும் நாடுகளில் முக்கியமானவை பார்க்கப்படும் இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற பிற நாடுகள், ஜி 20 கூட்டமைப்பில் வலுவான குரலைக் கொண்டுள்ளன. பொருளாதாரத்தில் வளரும் நாடுகளின் குரலாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை இந்தியா வளர்த்து வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில், “ இந்த ஆண்டு ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த வேளையில் உலகளாவிய வளரும் நாடுகளின் குரலை பெருக்குவதை நோக்கமாக நாம் கொண்டிருப்பது இயல்பானது.
எனவே வளரும் நாடுகள் பயனடையும் நோக்கில், உலகளாவிய அரசியல் மற்றும் நிதி நிர்வாகத்தை மறுவடிவமைக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று மோதி பேசியிருந்தார்.
வளரும் நாடுகளை இந்தியா முன்னிறுத்துகிறது. ஜி 20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பது குறித்து டெல்லி உச்சி மாநாட்டில் குரல் எழுப்பப்படும் என்ற மோதியின் வாக்குறுதியில் இருந்து இந்தியாவின் இந்த நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது.
இந்த முயற்சியில் வளரும் நாடுகள் (குளோபல் சவுத்) இந்தியாவின் பக்கம் இருப்பதாக கூறுகிறார் டாக்டர் சுத்ரோகமல் தத்தா.
“இந்தியா ஆரம்பத்தில் இருந்தே வளரும் நாடுகளின் குரலாக மாற முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஆப்பிரிக்கா, ஆசிய பசிபிக், இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகள், கரீபியன் தீவுகள் அல்லது தென் அமெரிக்க நாடுகள் பாராட்டுவதுடன், ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றன” என்கிறார் தத்தா.
ஆனால் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் குளோபல் சவுதின் கூட்டுக் குரல் இன்னும் பலவீனமாகவே உள்ளது என்ற கருத்தும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் மீரா சங்கர் கூறும்போது, “இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் வளரும் நாடுகளின் குரலாக மாற வேண்டும். உலக அளவில் இந்த நாடுகளின் குரல் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், இந்தியாவும், சீனாவும் குரல் எழுப்பினால் நல்லது” என்கிறார் அவர்.