;
Athirady Tamil News

மொபைலில் இருந்து கியூ.ஆர். ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.. புதிய வகை யு.பி.ஐ. ஏ.டி.எம். அறிமுகம்!!

0

மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது “யு.பி.ஐ. ஏ.டி.எம்.” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும். இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார்.

இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், “யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.