;
Athirady Tamil News

ஜி20 மாநாடு: வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கம், வெள்ளித்தட்டில் உணவு- ஜோ பைடனுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!!

0

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.இதையடுத்து ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பாரத் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இன்று முதல் உலக தலைவர்கள் டெல்லிக்கு வர உள்ளனர். இவர்களை வரவேற்க டெல்லி தயாராகி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி களை கட்ட தொடங்கி உள்ளது.

தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் விமானத்தில் கொண்டு வரப்படும் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ அரசு கார் மூலம் டெல்லி ஐ.டி.சி. மவுரியா ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இந்த கார் அதிக பாதுகாப்பு வசதியுடன் குண்டு துளைக்காதது ஆகும். ஓட்டலின் 14-வது மாடியில் உள்ள அறையில் ஜோபைடன் தங்க உள்ளார். இந்த மாடியில் தங்கி இருப்பவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனி லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜோபைடன் டெல்லி வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர், சிறப்பு பாதுகாப்பு குழுவை சேர்ந்த கமாண்டர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர் தங்கி இருக்கும் ஓட்டலிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓட்டலை சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை ஜோபைடன் பிரதமர் மோடியுடன் இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 2 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு நம் நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்க முலாம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளது.

இதற்காக இந்த பொருட்கள் விசேஷமாக தயார் செய்யப்பட்டு உள்ளன. விதவிதமான தங்கமுலாம் மற்றும் வெள்ளி பாத்திரங்களை வடிவமைக்கும் பணி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜூவ் கூறியதாவது: 3 தலைமுறைகளாக நாங்கள் இந்த பாத்திரங்ளை தயாரித்து வருகிறோம். வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கள் சாப்பாட்டு மேஜைகளில் இந்தியாவின் கலையை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த பாத்திரங்கள் ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகத்தின் கலைத்திறனை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட தட்டுகள், தம்ளர்கள் மற்றும் உணவு பரிமாறுவதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. உப்பு போன்ற உணவு பொருட்கள் வைப்பதற்காக தனி கிண்ணங்களும், அதனை வைக்க வெள்ளியிலான சிறிய பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் தேசிய பறவையான மயில் வடிவமும் வெள்ளியால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருட்கள் அனைத்தும் உலக தலைவர்கள் தங்கி இருக்கும் 11 ஓட்டல்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இன்று முதல் 10-ந்தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. .இன்று நள்ளிரவு முதல் 10-ந்தேதி வரை டெல்லி நகருக்குள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.