தம்பியை அடித்துக்கொன்று வீட்டு வளாகத்தில் புதைத்த தொழிலாளி!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவலம் பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் பினு மற்றும் ராஜ். இருவரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர். ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பினு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இதன் காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓணம் பண்டியை முடிந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ராஜ் திடீரென மாயமானார். வீட்டில் இருந்து வந்தவர் திடீரென எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் அவரது தாய் தவித்தார். அவர் தனது மகனை உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினார்.
ஆனால் ராஜை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை பற்றி தனது மற்றொரு மகனான பினுவிடம் தாய் பேபி கேட்டிருக்கிறார். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். ஆகவே ராஜ் மாயமானது குறித்து திருவல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாயமான ராஜ் மற்றும் அவரது அண்ணன் பினு ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்த தகவலை போலீசாரிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களது வீட்டின் பின் பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் புதிதாக மாமரக்கன்று நடப்பட்டிருப்பது குறித்து பேபி உள்ளிட்டோரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் மரக்கன்று நடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டதாகவும், அதில் எப்போது, யார் மரக்கன்றை நட்டார்கள்? என்பது குறித்து தனக்கு தெரியாது என்று பேபி கூறியிருக்கிறார். இதனால் பினு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அவர் ராஜை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பினுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது தம்பியை அடித்துக்கொன்று, உடலை வீட்டின் பின்பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டு புதைத்து, அதன் மீது மாமரக்கன்றை நட்டதாக தெரிவித்தார்.
இதனைக்கேட்டு போலீசாரும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பினுவுக்கும், ராஜூக்கும் தகராறு நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பினு, தம்பி ராஜை தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தம்பியின் உடலை வீட்டின் பின் பகுதியில் ஏற்கனவே தொண்டப்பட்டிருந்த குழியில் போட்டு புதைத்திருக்கிறார். அதனை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, தம்பியின் உடலை புதைத்த குழியில் புதிய மாமரக்கன்றை நட்டு வைத்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்களை போலீசாரிடம் பினு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பினுவை போலீசார் கைது செய்தனர். அவர் கூறியதன் அடிப்படையில் ராஜ் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டினர். அப்போது குழிக்குள் ராஜின் உடல் இருந்தது. உடல் புதைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆவதால், சற்று அழுகி காணப்பட்டது. ராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடன்பிறந்த தம்பியை அவரது அண்ணனே அடித்துக்கொன்று, உடலை வீட்டு வளாகத்தில் குழிதோண்டி புதைத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.