சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு!
தனது நாட்டுக்கான புதிய வரைபடத்தினை சீனா அறிமுகப்படுத்தியிருந்த போது, பிலிப்பைன்ஸ்,மலேசியா, வியட்நாம், தாய்வான், இந்தியா ஆகிய 05 நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தன.
இந்த வரிசையில் இப்போது ஜப்பானும் இணைந்து தனது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது.
சீனா தனது வரைபடத்தில் தென் சீனக் கடல் பகுதிகள் சிலவற்றை இணைத்ததனால், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தாய்வான் ஆகிய நாடுகள் தமது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தன.
இதே போன்று இந்தியாவின் அருணாச்சல பிரதேசமும் வரைபடத்தில் இணைந்து இருந்ததனால் இந்தியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது.
வரலாற்று ரீதியாக
இந்த வரிசையில் சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனா வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தீவுகளிற்கு சீனப் பெயரான டியாயு தீவுகள் என பெயர் மாற்றப்பட்டு குறிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் குற்றம் சுமத்தியுள்ளது.
“ஜப்பானிற்குச் சொந்தமான சென்காகு தீவுகளை சீனா தனது வரைபடத்தில் இணைத்ததனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், அந்த வரைபடத்தை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி உள்ளோம்” என்றும் ஜப்பான் அரசின் தலைமை செயலாளர் ஹிரோகாசு மட்கனோ கூறியுள்ளார்.
வரலாற்று ரீதியாகவும், சர்வதேச சட்டத்தின் படியும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்கே சொந்தமானது, இந்த விடயத்தைப்பொறுத்த வரை அமைதியாகவும், உறுதியாகவும் ஜப்பான் பதிலளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் ஜப்பானின் எதிர்ப்பினை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று சீனா அறிவித்துள்ளமை சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.