பயங்கரவாத அமைப்பாக வாக்னர் குழு : பிரிட்டன் தீர்மானம் !!
ரஷ்யாவினுடைய தனியாா் இராணுவப் படையாகவுள்ள வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது.
வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவாணையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டனின் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆணை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டால், அதன் பின்னர் வாக்னர் குழுவில் இணைவதோ, அந்தப் படைக்கு ஆதரவாக செயற்படுவதோ சட்டவிரோதமான செயற்பாடாக கருதப்படும்.
அதனை மீறியும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல், பிரிட்டனில் காணப்படுகின்ற வாக்னா் படையினரின் சொத்துக்களை முடக்கவும் வரைவு ஆணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினின் அரசியல் இலாபங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளின் நிலைத்தன்மையைக் குலைத்து செயற்படும் வாக்னா் படையினா் அனைவரும் பயங்கரவாதிகள்’ என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சரான சூயெல்லா பிரேவா்மன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழு, ரஷ்யாவுக்காக ஆப்ரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்ததனால் அது ‘அதிபர் புடினின் துணை இராணுவப் படை’ என்றும் வா்ணிக்கப்பட்டு வந்தது.
இப்போது இடம்பெற்று வருகின்ற உக்ரைன் – ரஷ்யப் போரில் கூட உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக இந்த படையினர் கைப்பற்றிக் கொடுத்திருந்தது.
இந்நிலையில், ரஷ்ய நாட்டின் இராணுவ தலைமையுடன் வாக்னா் குழுவின் தலைவா் ப்ரிகோஷினுக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக, இராணுவத்தலைமைக்கு எதிராக ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஆயுதக்கிளர்ச்சியொன்று வாக்னர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்னர் குழு மீது தாக்குதல் நிகழ்ந்தமையும், அவர்கள் பயணம் செய்த தனியார் விமானம் அழிக்கப்பட்டமையும் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இதுவே பிரிட்டனின் இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.