ஐதராபாத் சாலையில் வடிகாலில் தேங்கிய தண்ணீரை கைகளால் சுத்தம் செய்த பெண் போலீஸ் அதிகாரி!!
நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கை பேணுவதற்கும், பொது பாதுகாப்பை உறுதி செய்து நீதியை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் பலரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதற்கு சான்றாக ஐதராபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு தென்மேற்கு மண்டல பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குப்பைகள் அங்குள்ள டோலிச்சவுகி மேம்பாலம் அருகே வடிகாலில் தேங்கி உள்ளது. இதனால் வெள்ள நீருடன் சாக்கடையும் கலந்து சாலையில் ஓடியது. இதை அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியான தனலட்சுமி என்பவர் தனது வெறும் கைகளால் அகற்றி சுத்தப்படுத்தினார்.
இதுதொடர்பான வீடியோவை ஐதராபாத் போக்குவரத்து போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பெண் போலீஸ் அதிகாரி தனலட்சுமியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.