வெறுப்புணர்வு ஒழியும் வரை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி உறுதி!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்கினார். வெறுப்பு உணர்வுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த நீண்ட தூர பயணத்தை அவர் மேற்கொண்டார். 4,000 கி.மீ.க்கு அதிகமான தூரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற அவர், செல்லும் வழியில் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடினார்.
அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள், பல்துறை நிபுணர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நடைபயணம் மேற்கொண்டனர். குறிப்பாக கமல்ஹாசன், பூஜாபட், ரியாசென் போன்ற திரை பிரபலங்கள், முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர், கடற்படை தளபதி ராம்தாஸ் போன்ற பாதுகாப்புப்படை நிபுணர்கள், ரகுராம் ராஜன், அரவிந்த் மாயாராம் போன்ற பொருளாதார நிபுணர்கள் என பல்துறை வல்லுனர்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து பாதயாத்திரை சென்றனர்.இந்த பயணத்துக்கு இடையே 12 பொதுக்கூட்டங்கள், 100-க்கு மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகளை ராகுல் காந்தி மேற்கொண்டார். மேலும் 100-க்கு மேற்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள், 275-க்கு மேற்பட்ட நடை பயண கலந்துரையாடல்களிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த யாத்திரை தொடங்கியதன் முதல் ஆண்டு நிறைவை நேற்று காங்கிரஸ் கொண்டாடியது. இதையொட்டி ராகுல் காந்தி தனது நெடும்பயணத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஒற்றுமை மற்றும் அன்பை நோக்கிய இந்திய ஒற்றுமை பயணத்தின் (பாரத் ஜோடோ யாத்ரா) கோடிக்கணக்கான அடிகள். நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கான அடித்தளமாக மாறியுள்ளது. வெறுப்புணர்வு ஒழிந்து இந்தியா ஒன்றுபடும்வரை யாத்திரை தொடரும். இது எனது சத்தியம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.