ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் அதிபர் ஜோ பைடன்!!
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது. இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ம் தேதி நடக்கிறது. தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்க உள்ளார்.