ஊழல் மாபியாக்களுக்கு சார்பாக இருக்கின்றனர்!!
ஊழல் மோசடியை இல்லாதொழிக்க அரச தலைவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் மாறாக ஊழல் மாபியாக்களுக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையலாம். ஆனால் அவர் மீதான மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை.
சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு சுகாதார அமைச்சர் மாத்திரமல்ல, அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் நாட்டில் சுகாதார கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பதை காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
சுகாதார அமைச்சினால் மாத்திரம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது. வங்குரோத்து நிலையால் நாட்டின் சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
அமைச்சர் நிமல் சிறிபால நீண்டகாலம் சுகாதார அமைச்சராக கடந்த பதவி வகித்தார். அவர் பதவி வகித்த போது சுகாதார சேவையாளர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நிமல் சுகாதார அமைச்சினையே கோருவார். அதிலும் ஓர் இரகசியம் இருந்தது.
இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மைத்திரிபால சிறிசேனவை சுகாதார அமைச்சராக நியமித்தார்.
மருந்து மாபியாக்கள் அரச அனுசரணையுடன் செயற்படுகின்றன. ஊழல் மோசடியை இல்லாதொழிக்க அரச தலைவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாறாக ஊழல் மாபியாக்களுக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளார்கள்” என்றார்.