நல்லூரில் சுகாதாரத் திருவிழா!! (PHOTOS)
நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் “வரும்முன் காப்போம் ” சுகாதாரத் திருவிழா விழிப்புணர்வு செயற்பாட்டினை நடாத்தி வருகின்றனர்.
புற்று நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் தலைமையிலான மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ் விழிப்புணர்வு செயற்திட்டம் மாலை 6.00மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை வரை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இலவசமாக இடம் பெற்று வருகின்றது.
இச் செயற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுடன் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் உடல் பருமன், குருதி அமுக்கம், நீரிழிவு, பெண்நோயியல், புற்றுநோயியல் , மற்றும் உணவு , விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பிரிவு என பல்வேறு மருத்துவப் பிரிவினராலும் ஆண் பெண் வேறுபாடின்றி அனைத்து வயதினருக்கும் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் நோய் நிலை தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப் பட்டு வருகின்றன.
அதேவேளை புற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு சுகமடைந்தவர்களின் அனுபவங்கள் வீடியோக் காட்சியாக காண்பியப்படுத்தப்படுவதுடன் யாழ் பரியோவான் கல்லூரி யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் பங்குபற்றுதலுடன் விழிப்புணர்வு நாடகமும் பாடல்களும் இடம்பெற்று வருகின்றன.
யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் அமைப்பின் கனடா கிளையினரும் (J.M.F.O.A) மற்றும் CANE அமைப்பினரினதும் அணுசரணையில் இடம் பெற்று வரும் இச் செயற்திட்டத்தில்
மிக முக்கிய விடயமாக தொழில்நுட்ப பயன்பாட்டினூடாக தொலைபேசியில் கண்களை படம் எடுத்து கண்கள் ஊடாக புற்றுநோய்த் தாக்கம் அல்லது ஆரம்ப அறிகுறிகள் உடலின் பாகங்களில் இருக்கின்றமையினை கண்டறியும் புதிய தொழில் நுட்பத்தினையும் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே , ஆலய சூழலில் இடம்பெறும் இப் பணியில் மக்கள் பங்குபற்றி தம் உடல் சுகாதார நிலைமைகளை அறிந்து கொள்ளும் படி வைத்தியர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இப் பரிசோதனையில் பங்குபற்றிய திருமதி ப. யோகலெட்சுமி குறிப்பிடுகையில் கண்களை படம் எடுத்து பார்க்கும் பரிசோதனை பற்றி சொல்லும் போது புரியவில்லை. புற்று நோய் என்ற பெயரைக் கேட்பதே பயம். அந்த நிலையில் பரிசோதனை செய்து பார்ப்பம் என்று செய்துள்ளேன்.வழமையான கண் பரிசோதனை போன்று தான் ஆனால் கைபேசி ஊடாக தான் படம் பிடித்தனர்.அதன் முன் இது ஒரு பரீட்சார்த்த முயற்சி பின் விளைவு இல்லை.உடலின் வெவ்வேறு பாகங்களில் இருந்து நோய்த் தாக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிதல் மட்டுமே என சம்மத ஒப்பந்தம் வாங்கிக் கொண்ட பின்பே பரிசோதனை செய்தனர்.நம்பிக்கையோடு செய்துள்ளோம் என்றார். வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகையில் கோவில் அயலில் தான் உள்ளேன். கான்ஸர் என்றால் எடுத்ததும் எல்லாரும் இறப்பதில்லை. இப்படி விழிப்புணர்வு அவசியம் தான். கண்ணைப் படம் பிடிக்கும் பரிசோதனை செய்துள்ளேன் என்றார்.
எனவே தம் உடல் உள சுகாதாரம் தொடர்பில் கவனம் கொள்ளவேண்டிய சமுதாயப் பொறுப்பு மிக்க பணியை வழங்கி வரும் புற்றுநோயியல் பிரிவிற்கு சென்று எம்மை நாமே பரிசோதிக்க முன் வருவது அவசியம் ஆகும்.
இவ் வருட நல்லூர் உற்சவ காலத்தில் மட்டுமன்றி 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தயக்கமின்றி யாழ் போதனா வைத்தியசாலையின் “”புற்று நோயை ஆரம்பத்தில் கண்டறியும் மையம் “”பிரிவில் 021 222 2640 அல்லது 070 777 2640 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும்முன் காப்போம்
பரிசோதனைகளை மேற்கொள்வோம்.