நேற்றுவரை தனித்துப் போட்டி எனக் கூறிவந்த JDS; இன்று 4 சீட்டுகள் ஒப்பந்தத்துடன் பாஜக-வுடன் கூட்டணி!!!
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.
ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் ஜனதா தளம் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. “பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் கட்சி இடையே ஒற்றுமை இருக்கும். மத்திய மந்திரி அமித் ஷா ஜனதா தளம் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்து இருக்கிறார்,” என்று பி.எஸ். எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
ஜூன் 1996 முதல் ஏப்ரல் 1997 வரை இந்திய பிரதமராக இருந்துவந்த ஹெச்.டி. தேவகவுடா கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளை ஒதுக்கும் படி கேட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் மண்டியா, ஹசன், தும்குரு, சிக்பெல்லாபூர் மற்றும் பெங்களூரு புறநகர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்கு பிறகு நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் ஒப்புக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக ஜூலை மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய தேவகவுடா, தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார். “நாங்கள் ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்,” என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி உருவாகி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.