2 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் விரைந்தனர்!!
மணிப்பூர் மாநிலத்தில் 2 பிரிவினரிடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதை தொடர்ந்து பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சோ இகாய் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே வன்முறையால் இடம்பெயர்ந்த இரு பிரிவை சேர்ந்த 50 ஆயிரம் பேரை மீண்டும் குடியேற வைக்க அந்த மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஆயிரம் எல்லை பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு பின்னர் இன்னும் கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.