முருங்கைப்பூ மருத்துவம்!! (மருத்துவம்)
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும்.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.
முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும், கண் பார்வை குறைபாடு நீங்கும்.
அத்தோடு ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவுக்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப்பூவை எண்ணெயில் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு தேய்த்து குளிக்கவைத்து வந்தால் சளி பிடிக்காது. அத்துடன் அதன் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதனால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.