ஜோ பைடனுடன் இந்தியாவுக்கு வரும் ரகசிய ஏஜென்ட்களும் அணு ஆயுதப் பெட்டியும்!!
ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வருகிறார். ஆனால், அவருடன் அவரின் பெரும் பாதுகாப்பு படையும் இந்தியா வருகிறது.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறித்து ஹாலிவுட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சினிமா எடுக்குமளவுக்கு வலுவான பாதுகாப்பு அரணை கொண்டவர் அமெரிக்க அதிபர்.
The United States Secret Service என்ற அமெரிக்காவின் ரகசிய சேவை அமைப்பு அதிபரின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1865ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டிருந்தாலும், 1901ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு பணி இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுமார், சுமார் 7000 ஏஜென்ட்கள் மற்றும் அதிகாரிகள் இந்த ரகசிய சேவையில் பணிபுரிகின்றனர். இதில் பெண்களும் உள்ளனர். இதில் வழங்கப்படும் பயிற்சி உலகில் மிகவும் கடினமான பயிற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபர் உலகின் மிகுந்த அதிகாரம் வாய்ந்த அதிபராக கருதப்பட்டாலும் அவரின் பாதுகாப்பு குறித்து எல்லா விஷயத்திலும் இந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ஜிதான் முடிவுகளை எடுக்கும்.
அதிபர் தானாக விருப்பப்பட்டு தனிமையில் இருக்க விரும்பினாலும் அந்த ஆணையை ரகசிய சேவையினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் ஒரு நாட்டிற்கு செல்ல முடிவெடுத்தால் இந்த ரகசிய சேவை மூன்று மாதங்களுக்கு முன்பே அதன் பணியை தொடங்கிவிடும்.
பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில்தான் அமெரிக்க அதிபர் நடந்து செல்வார்.
இது நிச்சயம் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு அடுக்கு மட்டுமல்ல, அதற்கு ஆகும் செலவும் அதிகம்தான்.
ஏனெனில், இதற்கு முக்கியமான காரணம் உண்டு. இதுவரை அமெரிக்க அதிபர்கள் நான்கு பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1865-ல் ஆப்ரஹாம் லிங்கன், 1881-ல் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் (James Garfield), 1901-ல் வில்லியம் மெக்கின்லி, கடைசியாக 1963-ல் ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டனர்.
எனவே தனது அதிபர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மூன்று அடுக்காக வழங்கப்படும். அதாவது அதிபரின் பாதுகாப்பு பிரிவு ஏஜென்ட்கள் உள் அடுக்காகவும், அதன் பின் ரகசிய சேவையின் ஏஜென்ட்கள் நடு அடுக்காகவும், வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் காவல்துறையினரும் இருப்பர். அவர் டெல்லி வரும்போது அவருக்கு டெல்லி போலிசாரும், மத்திய ரிசர்வ் போலிஸ் படையும் சேர்ந்து பாதுகாப்பு வழங்கும். இது நான்காம் அடுக்காக இருக்கும்.
எந்த ஒரு நாட்டுக்குள் அதிபர் பயணம் செய்ய முடிவெடுத்துவிட்டால், ரகசிய சேவை மற்றும் வெள்ளை மாளிகையின் ஊழியர்கள் 2 அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னதாக வந்து அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்பை சந்திப்பார்கள். உளவுத் துறையில் உள்ள அதி முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு நிபுணர்களிடம் பேசுவார்கள்.
சீக்ரெட் சர்வீஸ்தான் அதிபர் எங்கு தங்குவார் என்பதை முடிவு செய்யும். அந்த இடம் முழுவதுமாக சோதிக்கப்படும். அந்த தங்கும் விடுதியின் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் பின்புலமும் விசாரித்து சரிபார்க்கப்படும்.
விமான நிலையத்தில் அதிபரின் ஏர்ஃபோர்ஸ் விமானம் மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து 6 போயிங் சி17 விமானங்களும் கூடவே வரும். ஹெலிகாப்டரும் உண்டு.
அதில் லிமசின் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், பல ஏஜென்ட்கள் மற்றும் ஊழியர்களும் இருப்பர். இவை தரையிறங்குவதற்கு விமான நிலையத்தில் தனி இடம் ஒதுக்கப்படும்.
ரகசிய சேவையும், உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளும் சேர்ந்து அமெரிக்க அதிபர் எந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் , எங்கே தங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் . அதிபரின் வாகன அணிவகுப்பு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவு செய்வர்.
ஆபத்து சமயங்களில் எங்கே தப்பிச் செல்வது, தாக்குதல் நடந்தால் தப்பிக்க பாதுகாப்பான இடம் எது, போன்ற விஷயங்கள் ஆராயப்படும்.
அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள மருத்துவமனைகள் உள்ளனவா, அதேபோல அதிபர் தங்கும் இடத்திலிருந்து 10 நிமிட தொலைவில் அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை உள்ளதா என்றும் உறுதிப்படுத்தப்படும்.
ஏஜென்ட் ஒருவர் அருகில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிறுத்தப்படுவார். அவசரகாலத்தில் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அவ்வாறு ஏஜென் ட்கள் நிறுத்தப்படுகின்றனர்.
இவை அனைத்துக்கும் மேல், அதிபரின் குரூப் உள்ள ரத்தமும் உடன் கொண்டு செல்லப்படும். அவசர காலத்தில் ரத்தம் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்வார்கள். அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
டெல்லியில், அதிபரின் வருகை நெருங்குவதால் அவர் செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு நிறுத்தத்தையும் ஏஜென் ட்கள் சோதனை செய்வார்கள். அதிபர் தங்களும் விடுதிக்கு வெளியே சாலையில் பார்க் செய்யப்பட்டிருக்கும் கார்கள் அகற்றப்படும்.
பல்வேறு விதமான ஆபத்து காலங்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்படும்.
அதிபர் தங்கும் ஹோட்டலில் மொத்தத் தளமும் அவருக்காக காலி செய்யப்படும். அவர் அறை உள்ள தளம் மட்டுமல்ல அதற்கு மேல் மற்றும் கீழே உள்ள தளமும் அவரின் ஊழியர்கள் மட்டுமே அங்கே தங்கமுடியும்.
அவர் தங்கும் அறையில் மறைமுகமாக ஏதேனும் கேமராக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா அல்லது பதிவுக் கருவி இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
அதிபருக்கு உணவு தயாராவது எப்படி?
அங்கு தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி உள்ளிட்டவை. ஜன்னல்களில் குண்டு துளைக்காத ஷீல்டுகள் பொருத்தப்படும். அதிபரின் உணவு மற்றும் அவருக்கான உணவை சமைக்கும் ஊழியரும் உடன் வருவர். அவரே அதிபருக்கு உணவு சமைத்து பரிமாறுவார். பரிமாறப்படும் உணவும் ரகசிய சேவையால் கண்காணிக்கப்படும்.
ரகசிய சேவையினருக்கு மற்றொரு முக்கிய பொறுப்பும் உள்ளது. அதாவது எப்போதுமே அதிபருடன் உடனிருக்கும் ராணுவ உதவியாளரையும் அவர்கள் பாதுகாக்க வேண்டும். இந்த ராணுவ உதவியாளர் கையில்தான் அமெரிக்க அணு ஆயுதங்களை செலுத்துவதற்கான கோட்கள் (launch codes) நிறைந்த பெட்டி இருக்கும். இதை அணு ஆயுத பொத்தான் என்கிறார்கள்.
அதிபர் அவரின் லிமசீன் (limousine) காரில் மட்டுமே பயணம் செய்வார். இந்த காரின் பெயர் பீஸ்ட். இந்த காரில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும். இது குண்டு துளைக்காத கார் மட்டுமல்ல இதில் பிற பாதுகாப்பு கருவிகளும் தொழில்நுட்பங்களும்கூட இருக்கும்.
இதில், smoke screens, tear gas, night vision technology, grenade launcher போன்ற அனைத்து வசதிகளும் இதில் இருக்கும். எந்த வித ரசாயன தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வசதியும் இந்த காரில் இருக்கும்.
இந்த காரின் ஓட்டுநர்கள் தாக்குதல் நடக்கும் சமயத்தில், வாகனத்தை முழுவதுமாக எதிர் திசையில் அதாவது 180 கோணத்தில் திருப்ப பயிற்சி எடுத்திருப்பர்.
2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குடியரசுத் தின சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பாரம்பரிய வழக்கத்தின்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இந்திய குடியரசுத் தலைவருடன் அவர் செல்ல வேண்டும். ஆனால் அவர் தனது குண்டு துளைக்காத பீஸ்ட் காரில்தான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
ஆனால் அதே தினம் மற்றொரு பாதுகாப்பு நடைமுறை ஒன்றும் மீறப்பட்டது.
ரகசிய சேவையின் வழிகாட்டுதலின்படி, திறந்தவெளி தளத்தில் அமெரிக்க அதிபர் 45 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. ஆனால் ஒபாமா சுமார் 2 மணி நேரம் அங்கிருந்தார்.
சரி, ஆனால் இந்த விஷயம் எல்லாம் ரகசியம் கிடையாது. ஏனெனில், ரகசிய சேவையில் இருந்தவர்கள் சிலர் புத்தகங்களை எழுதியுள்ளனர். எனவே இத்தனை தகவல்களும் ரகசியமான தகவல்கள் அல்ல. ரகசிய சேவையில் 23 ஆண்டுகாலம் பணிபுரிந்த சோஜஃப் பெட்ரோ என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்
இதை தவிர 100க்கும் மேற்பட்ட ரகசிய சேவை ஏஜென்ட்களை நேர்காணல் செய்து ரொனால்ட் கெஸ்லெர் என்பவர் ‘In the President’s Secret Service’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் அந்த பயணத்திற்காக ஆயிரம் பேர் பணியாற்றுவர்.
இதைதான் ஒருமுறை பிபிசியின் அமெரிக்க வெள்ளை மாளிகை விவகார செய்தியாளர் இப்படி எழுதியிருந்தார். “அமெரிக்க அதிபர் பயணம் செய்யும்போது மொத்த உலகமும் நின்றுவிடும்.”