ஆசியான் நாடுகளை அரவணைக்கும் இந்தியா !!
ஆசியான் நாடுகளை இந்தியா அரவணைத்துச் செல்வதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
அண்மையில் இந்தோனேசியாவில் ஆசியான் மாநாடு இடம்பெற்றது. அதில் பங்கேற்க வருமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா அதிபர் விடோடோ அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை ஏற்று இந்தியப் பிரதமர் மோடி ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார்.
சர்வதேச வளர்ச்சியில் ஆசியான் அமைப்பின் பங்கு முக்கியமானது. ஆசியானில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது.
இந்தியாவின் கிழக்கு ஆசியக் கொள்கையின் முக்கிய புள்ளியாக ஆசியான் அமைப்பு உள்ளதென மோடி மாநாட்டில் கூறியுள்ளார்.
தென் சீனக் கடலில் ஆதிக்கத்தைச் செலுத்த சீனா கடுமையாக போராடுகிறது. இதனால் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்வான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிச்சல் அடைந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் நடந்த ஆசியான் மாநாடு உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.
ஆசியான் மாநாடு மூலம் புதிய போரை உருவாக்க வேண்டாம் என சீனாவும் எச்சரிக்கை விடுத்தது. அதனை மீறி நடந்த மாநாட்டில், இந்தியா பங்கேற்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 5 நாடுகளின் முயற்சியால், 1967ல் ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1984இல் புருனேயும், 1995ல் வியட்நாமும், 1997ல் லாவோ, மியான்மரும், 1999ல் கம்போடியாவும் இணைந்தன. தற்போது ஆசியான் அமைப்பில் 10 நாடுகள் உள்ளன.
‘ஒரு பார்வை, ஒரு அடையாளம், ஒரு சமூகம்’ என்ற குறிக்கோளுடன் ஆண்டுக்கு இருமுறை மாநாடு நடத்தப்படுகிறது.
ஆசியான் அமைப்பிற்கென தனி தேசிய கீதமும், கொடியும் உள்ளன. சுழற்சி முறையில் அதன் தலைமையும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.