;
Athirady Tamil News

ஜி20 உச்சி மாநாடு – டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது!!

0

ஜி20 உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்துகிறார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

மேலும், உக்ரைன் போரின் எதிரொலியாக நிகழ்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதைத்தவிர வறுமை மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வதற்காக உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் புத்தாக்கம், பருவநிலை நிலைத்தன்மை, சமமான உலகளாவிய சுகாதார அணுகல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும், கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி வந்தடைந்தனர்.

ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் தலைநகரை அடைந்தனர்.ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜீவா உள்ளிட்டோரும் வந்துள்ளனர். டெல்லி வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் வரவேற்றனர். நாட்டுப்புற கலைஞர்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இந்த வரவேற்பில் இடம் பெற்றன. வல்லரசு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துணை ராணுவம் மற்றும் போலீசார் என 1.30 லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் அரங்கம் மற்றும் தலைவர்கள் தங்கும் விடுதிகள் அனைத்தும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. விமானப் படையும் இந்த பாதுகாப்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.