உக்ரைன் போரினால் மாறும் ஜி20 இறுதி கூட்டறிக்கை!!
அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரின் தாக்கம் ஜி20 கூட்டறிக்கை வெளியிடுவதில் பெரிதாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநாட்டின் கடைசி நாளான நாளை, மாநாட்டின் முடிவில் அனைத்து உறுப்பினர் நாட்டு தலைவர்களின் ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கம். உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில், ரஷியாவை சீனா ஆதரிக்கிறது. ஆனால் அமெரிக்கா, உக்ரைனை ஆதரித்து ரஷியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருக்கிறது. இதனால் நாளை படிக்கப்பட வேண்டிய தலைவர்களின் மாநாட்டு பிரகடன கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கப்பட வேண்டியவை தெளிவில்லாமல் இருக்கிறது.
ரஷிய உக்ரைன் போரை குறிப்பிடாமல் வெளியிடப்படும் எந்த பிரகடனத்திற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் ஜி7 அமைப்பை சேர்ந்த நாடுகள் ஒப்புதல் அளிக்காது என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கட்டாயத்தினால், தலைவர்களுக்கான இந்த இறுதி கூட்டறிக்கையில் புதியதாக சில வாக்கியங்களை இந்தியா சேர்த்து அந்நாட்டு அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்பு நடந்த எந்த முக்கிய சந்திப்புகளிலும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை உட்பட எந்த துறையிலும், உக்ரைன் போரினை குறிப்பிடும் எந்த சொற்றொடரையும் உள்ளடக்கிய ஆவணங்களுக்கும் சீனா மற்றும் ரஷியா ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.