இந்தியா இனி பாரத்! மோடியின் ஜி 20 அதிரடி !!
ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாடு இன்று(9) காலை டெல்லி பிரகதி மைதானம் பாரத் மண்படத்தில் ஆரம்பமாகியுள்ளது. மாநாட்டிற்கு வருகை தந்த உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.
இதன்போது ஆபிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக ஜி20 அமைப்பில் இணைக்க பிரதமர் மோடி முன்மொழிந்தார். அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் நிரந்த உறுப்பினராக அங்கத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஜி20 அமைப்பு ஜி21 ஆக மாற்றம் பெற்றுள்ளது.
இதனிடையே ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்களுக்கு முன்பாக அவரவர் நாட்டை குறிக்கும் வகையில் அட்டை வைக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக உள்ள அட்டையில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
சவால்களுக்கு புதிய வழிமுறைகளில் தீர்வு
இதன் போது உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல வருடங்களாக தீர்வு காணப்படாத சவால்களுக்கு புதிய வழிமுறைகளில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
உலக நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை தோன்றியுள்ள சூழ்நிலையை மாற்றி நம்பிக்கையுள்ள நட்பு நாடுகளாக நாம் மாற வேண்டும் எனவும் கொரோனா தொற்றிற்கு பின்னர் உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் நம்பிக்கையும் குறைந்திருந்தாக கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, நாடுகளுக்கிடையேயான போர், அந்த நிலையை மேலும் நலிவடைய செய்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கொரோனா பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், ஜி20 மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான கூட்டறிக்கை மாநாட்டின் நிறைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ளமை தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
“15 ஆண்டுகளுக்கு முன்பு, ஜி20 தலைவர்கள் நிதி நெருக்கடிக்குப் பிறகு உலக வளர்ச்சியை மீட்டெடுக்க முதன்முறையாக ஒன்றிணைந்தனர்.
மகத்தான சவால்களின் நேரத்தில் நாம் சந்திக்கிறோம். மீண்டும் தலைமை வழங்க உலக நாடுகள் ஜி20ஐ எதிர்பார்க்கிறது. இந்த சவால்களை நாம் ஒன்றாகச் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி20 அமைப்பில் ஆபிரிக்க ஒன்றியத்தை இணைத்தமைக்கு தென்னாபிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா வாழ்த்து தெரிவித்துள்ளார்.