தேவையற்ற நடவடிக்கை: மத்திய பாதுகாப்புப் படைக்கு மணிப்பூர் மந்திரிசபை கண்டனம்!!
மணிப்பூரில் முற்றிலும் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நடைபெற்ற வண்ணம் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய பாதுகாப்புப்படைக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம், அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெள்ளிக்கிழமை சம்பவத்தில் மத்திய பாதுகாப்புப்படையின் தேவையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விசயத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பதற்றம் அதிகமாக இடங்களில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தின்படி, ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான அதிகாரம் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வன்முறையின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு நான்கு மாதத்திற்குள் நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 75 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேன் சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு, முதன்முறையாக பாதுகாப்புப்படை மீது விமர்சனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.